Friday, January 31, 2014

மலுக்கம்மா பரம்பரை

மலுக்கம்மா பரம்பரை 
- ஆ.சிவசுப்பிரமணியன் 


     கன்னியாகுமரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (NH-7A) தூத்துக்குடிக்கும் கோவில்பட்டிக்கும் இடையில் உள்ள ஊர் நள்ளி. இவ்வூரிலுள்ள கருப்பசாமி கோவில் சுவையான சமூக வரலாற்றுச் செய்தியொன்றைத் தன்னுள் கொண்டுள்ளது. நாடார் சமூகத்தினருக்கு சொந்தமான இக்கோவிலை இச்சமூகத்தினர்  ‘மலுக்கம்மா கோவில்என்றே அழைக்கின்றனர் . இது தொடர்பாக இவர்களிடம் வழங்கும் பழமரபுக்கதை வருமாறு :
     சாத்தூருக்கு அருகே ஆவுடையார்புரம் என்ற கிராமம் உள்ளது. வெள்ளையர் ஆட்சியின் போது இவ்வூரில் உள்ள வெற்றிலைக் கொடிக் காலில் இருந்து வெற்றிலை வாங்கி வந்து வாணிபம் செய்யும் நாடார் ஒருவர் நள்ளி கிராமத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் வழக்கம் போல வெற்றிலை வாங்க , தன பொதி மாடுகளுடன் ஆவுடையர்புரம் சென்ற போது நிறைமாதக் கர்ப்பிணியான முஸ்லீம் பெண்ணொருத்தியை அவர் சந்திக்க நேரிட்டது. இப்பெண் மலுக்கம்மா என்று அழைக்கப்படுகிறாள். ('மாலிக்' என்ற சொல்லின் திரிபே இது  என்று எழுத்தாளர்  ஹமிம் முஸ்தபா விளக்கமளிக்கிறார்.)
தன் கணவரையும் பெற்றோர்களையும் எதிரிகள் கொன்றுவிட்டதாகவும் தனக்கு அடைக்கலமளிக்க வேண்டுமென்றும் அப்பெண் அவரிடம் மன்றாடினாள். அவரும் இரக்கப்பட்டு அப்பெண்ணை , தன் பொதிமாடு ஒன்றின் மேல் அமரச்செய்து நள்ளி கிராமத்துக்க்கு அழைத்து வந்தார்.
அக்கால வழக்கப்படி  பேறுகாலத்திற்கான தனிக்குடிசையொன்றைக் கட்டி அதில் அம்முஸ்லீம் பெண்ணைக் குடி இருக்கச் செய்தார் . அக்குடிசை கருப்பசாமி கோயில் அருகே அமைக்கப்பட்டது. ஒன்றிரண்டு தினங்களில் ஆண்குழந்தையோன்றைப்  பெற்றெடுத்து விட்டு அப்பெண் இறந்து போனாள். இறக்கும் முன்னர் தன பையனை அவரே வளர்த்து, திருமணம் செய்விக்கும்படி வேண்டினாள்.
அப்பெண் இறந்த பின்னர், அவளது மகனை வளர்த்த அந்நாடார் ,தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்வித்தார். அவர்களுக்கு ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தன. இவ்வேழு பையன்களுக்கும் திருமணம் ஆகி இவர்களது பரம்பரையினர் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள வேலாயுதபுரம், முள்ளுப்பட்டி, துறையூர். புங்கவர்நத்தம் ஆகிய நான்கு கிராமங்களிலும் குடியேறி பல்கிப் பெருகினர். இவர்கள் ‘மலுக்க நாடார் வம்சம்’ என்று குறிப்பிடப்படுகின்றனர்.

மலுக்கம்மா வழிபாடு
நள்ளியில் உள்ள நாடார் சமுகத்தின் சொந்தக் கோவிலாக கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கிழக்கு பார்த்த முகமாக கருப்பசாமியின் பீடம் உள்ளது. தற்போது உலோக வடிவிலான கருப்பசாமி சிலையும் இதன் அருகே நிறுவப்பட்டுள்ளது.
கருப்பசாமி பீடத்திற்கு கிழக்கில் சில அடி தூரத்தில் தென்புறமாக மலுக்கம்மாவின் கருவவறையுள்ளது . கருவறையின் நுழைவாயில்  வடக்கு புறமாகயிருக்க உள்ளே கிழக்கு முகமாக , உருவமற்று ஆடை வடிவில் மலுக்கம்மா இருக்கிறாள். பீடத்திற்கு மாற்றாக மரப்பெட்டி யோன்றுள்ளது. மரப்பெட்டியை மறைத்து ஆடையுள்ளது .
ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியன்று கருப்பசாமி கொடை (திருவிழா)  நிகழும் அப்போது மேற்கூறிய நான்கு கிராமங்களிலும்  வாழும் மலுக்க  நாடார் வம்சத்தினர்  இங்கு கூடுகின்றனர். இவர்களின் ஆண் வாரிசுகளிடம் மட்டுமே கோவில் வரி வாங்கப்படுகிறது. பெண் வாரிசுகளிடம் வரி வாங்கப்படுவதில்லை ஆனால் வழிபாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
     கருப்பசாமி கோவிலின் ஈசானி மூலையில் (தென் மேற்கு) பேறுகாலக் குடிசையொன்று கட்டும் பழக்கம் முன்னர் இருந்துள்ளது. தற்போது குடிசை கட்டுவதில்லை. தட்டி வைத்து அறை போல் அமைக்கிறார்கள். அதன் அருகில் அடுப்புப் போட்டு, குளிப்பதற்காக வெந்நீர் போடுகிறார்கள். ஊரிலுள்ள ‘ஏகாலி’ (வண்ணார்) சமுகத்துப் பெண் “மாற்றுதுணி” கொண்டு வந்து தருகிறார். ‘பேறுகாலச்சாமான்’ என்ற பெயரில் பேறுகாலமான பெண்ணுக்குத் தரப்படும் நாட்டு மருந்து, படையல் போன்று வைக்கப்படுகிறது. அத்துடன் அவலும் பொரிகடலையும் கலந்து படையலாக வைக்கப்படுகிறது. பூஜை நடைபெறும் பொழுது பெண்கள் அனைவரும் முக்காடு போட்டுக்கொள்வார்கள்.
     பேறுகால மருந்தை வழிபடுபவர்கள் அனைவருக்கும் முன்பு விநியோகித்துள்ளனர். வழிபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில்      துளியளவு மருந்தைத் தாளில் மடித்துத் தருகின்றனர். அவலும் பொரிகடலையும் அனைவருக்கும் பிரசாதப் பொருளாகத் தரப்படுகிறது.
     கருப்பசாமிக்கு ஆடு வெட்டிப்பலி கொடுக்கும் போது மலுக்கம்மா கருவறையின் கதவைச் சாத்தி விடுகிறார்கள். மலுக்கம்மாவுக்கு உயிர்ப் பலி தருவதில்லை. இறைச்சிக்காக ஆடு அறுக்கும் முன் ‘பிஸ்மி’ ஓதி ஆடறுப்பது இஸ்லாமியரின் வழக்கம். இது சமயம் சார்ந்த விதியாகும் . அவ்வாறு ஓதி ஆடறுக்க முடியாத நிலையில் மலுக்கம்மாளுக்கு ஆடு பலி கொடுப்பதில்லை . தட்டாம்பயிறு அவித்து படைத்து அதைப் பிரசாதமாக வழங்குகின்றனர். இறப்பு வீட்டில் நிகழும் ‘கிழமை’ என்னும் சடங்கில் பயிறு அவித்து அதை இறந்தவருக்குப் படைக்கும் வழக்கம் உண்டு. அவித்த தட்டாம்பயிறு வழங்குதல் இப்பழக்கத்தை நினைவூட்டுகிறது.
     மலுக்க நாடார், மலுக்கம்மாள், மலுக்க ராஜா, மலுக்க ராஜேஸ்வரி எனக் குழந்தைகளுக்குப் பெயரிடும் பழக்கம் பல தலைமுறைகளாக உள்ளது.
     சொத்துரிமை பெண்ணுக்கு கிடையாது என்ற நிலை தமிழ்ச்சமுதாயத்தில் நிலவியதன் அடிப்படையில் கோவில் வழிபாட்டில் வரி செலுத்தும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது . ஏனெனில் வரி செலுத்துவோரால் மட்டுமே கோவில் நிர்வாகம்  குறித்து கேள்வி எழுப்ப முடியும், மலுக்கம்மா கோவில்,     வழிபாட்டுத்தலமாக மட்டுமில்லாமல் மலுக்க நாடார் வம்சத்தினரின் பொதுச்  சொத்தாகவும் விளங்குகிறது.

வழிபாடு உணர்த்தும் செய்தி 
     பேறுகாலக் குடிசையமைப்பது, மலுக்கம்மாவிற்குக் கட்டித்தரப்பட்ட பேறுகால குடிசையை நினைவூட்டுகிறது.
     மாற்றுச்சேலையை ஊர் எகாலிப் பெண்கள் பேறுகாலமான பெண்ணிற்கு நாள்தோறும் வழங்குவது பழைய கிராமமரபு. இம்மரபின் படி  மலுக்கம்மா மாற்றுச்சேலையை எகாலிப் பெண் கொண்டு வருவது அமைகிறது.
     பேறுகாலமான பெண் குளிப்பதற்கு வெந்நீர் போடுதல், பேறுகால மருந்து கொடுத்தல் ஆகிய நிகழ்வுகளும் மலுக்கம்மா வழிபாட்டில் சடங்குகளாக இடம் பெற்றுள்ளன.
     மலுக்கம்மா வழிபாட்டில் காணப்படும் இந்நிகழ்வுகள், ஏற்கனவே நடந்த ஒன்றை நடித்துக்காட்டும்(enactment) தன்மையில் அமைந்துள்ளன.

சொத்துரிமை பெண்ணுக்கு கிடையாது என்ற நிலை தமிழ்ச்சமுதாயத்தில் நிலவியதன் அடிப்படையில் கோவில் வழிபாட்டில் வரி செலுத்தும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் வரி செலுத்துவோரால் மட்டுமே கோவில் நிர்வாகம் குறித்து கேள்வி எழுப்ப முடியும். மலுக்கம்மா கோவில் வழிபட்டுத்தலமக மட்டுமின்றி மலுக்க நாடார் வம்சத்தின் பொது சொத்தாகவும் விளங்குகிறது என்பதை நினைவில் கொண்டால் பெண் வாரிசுகளிடம் வரி வாங்காமைக்கான காரணம் புரியும்.
         இறந்த கன்னிப்பெண்களுக்கும் சுமங்கலிப்பெண்களுக்கும் ஆண்டுதோறும் அவர்களை நினைவுகூர்ந்து வழிபாடு நிகழ்த்துவது சில வீடுகளில் உண்டு. அவ்வழிபாட்டின்போது இறந்தவரின்  உருவமாக சேலை ஒன்றை வைத்து வழிபாடுவர். முதன் முதலில் வழிபாட்டின்போது இறந்தவர் உடுத்தியிருந்த சேலை பயன்படுத்தப்படும். பின் ஆண்டுதோறும் புதிய சேலை இடம்பெறும். வழிபாடு முடிந்தவுடன் அச்சேலையை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டிவிடுவர். பனை நார் பெட்டியைப் பயன்படுத்தும் பழக்கமும் உண்டு. மறு ஆண்டு புதிய சேலையை வாங்கி விட்டு பழைய சேலையை எடுத்து உடுத்திக்கொள்வர்.
     மலுக்கம்மா வழிபாட்டில் அவரின் உருவமாக சேலை உருவகிக்கப்படுகிறது. இது மேற்கூறிய வழிபாட்டுமுறையைச் சார்ந்துள்ளது. பீடம் போல் பயன்படுத்தப்படும் பெட்டி தொடர்பாக இரு கருத்துக்களைக் கூற முடியும். ஒன்று மலுக்கம்மா தன்னுடன் கொண்டு வந்த பெட்டியின் எச்சமாக இருக்கலாம்.
     இரண்டவது வழிபாட்டில் இடம் பெறும் சேலையை வைப்பதற்காக  உருவாக்கப்பட்ட பெட்டியாக இருக்கலாம்.
      மலுக்கம்மா கன்னிப்பெண்ணோ சுமங்கலிப்பெண்ணோ அல்லள். அப்படியிருக்க சேலை வடிவில் அவளை வணங்குவது ஏன்? என்ற வினா எழுகிறது.
     பேறுகாலத்தையடுத்து நிகழ்ந்த அவளது அகால மரணமும்,தான் பெற்றெடுத்த மகனை திருமண உறவின் வாயிலாக நாடார் சமூகத்துடன் இணைத்துவிட வேண்டும் என்ற அவளது இறுதி விருப்பமும் வழிபாட்டிற்குரியவளாக அவளை மாற்றியுள்ளன. இதன் அடிப்படையில் தொடக்கத்தில் அவளது சேலை அவளது உருவத்தின் குறியீடாக அமைந்து, பின்னர் ‘கன்னி கும்பிடுதல்’ என்ற வ்ழிபாட்டுச் சடங்கில் நிகழ்வதை போன்று ஆண்டுதோறும் புதிய சேலையை பயன்படுத்தும் முறை தோன்றியிருக்க வேண்டும்.
மதவேறுபாடின்றி  ஆதரவற்ற இஸ்லாமியப் பெண்ணுக்கு அடைக்கலமளித்து, அவள் பெற்றெடுத்த மகனை வளர்த்து, தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்வித்து, ‘மலுக்க நாடார் வம்சம்’ என்ற புதிய தலைமுறையை உருவாக்கிப் பெயர் தெரியாத வியாபாரி போற்றுதலுக்குரிய ஒருவர்.
இன்று வரை மலுக்க நாடார் வம்சத்தின் குல தெய்வமாக  மலுக்கம்மா விளங்குகிறாள்மலுக்கம்மா வழிபாடு சற்று வேறுபாடான மூத்தோர் வழிபாடாக விளங்குகிறது.
முதல் முறையாக  மலுக்கம்மா குறித்த செய்தியைக் கூறியுதவிய வேதியல் துறைப் பேராசிரியர்  M.P.M. இராமச்சந்திரன், கள ஆய்வில் செய்திகளைக் கூறியுதவிய மலுக்கம்மா கோவில் பூசாரி திருமதி. மு.ஜோதி(33) ,திரு. ராசு ¿¡¼¡÷ (72) கள ஆய்வில் பெரிதும் துணை நின்ற திரு. ¿.சுப்புராம் (நள்ளி குமாரபுரம் ஆகியோர் அனைவருக்கும் நன்றி.)

For more details , please contact:
M. Ramachandran
Mobile : +91-9442247878

Malukkamma , Nadar



View Nalli, Tamil Nadu 626205 in a larger map